நடுகல்

                                          நடுகல்!



Hero Stones (வீரன்கல் - வீரக்கல்) என வழங்கிய கற்கள் இப்பொடுது Memorial Stones (நினைவுக் கற்கள்) என வழங்கப்படுகின்றன.

வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பழங்குடி மக்களின் பண்பாட்டை விளக்க நடுகற்களே காரணமாக அமைந்துள்ளன.

வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுக்கும், போரில் வீரமரணம் அடைந்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது (புறம் 221,223,232). பிற்காலத்தில் இவை பள்ளிப்படையாக மாறியது. பெரும்பாலும் வீரர்களுக்கே நடுகல் நாட்டப்பட்டது. குறிப்பாக போருக்கு முதற்காரணமாக அமையும் ஆநிரைகவரும் வெட்சித்திணைக்கும், கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் கரந்தைத் திணைக்கும் உரிய நடுகற்களே மிகுதியாகும். கல் என்றாலே நடுகல்லையே குறிக்கும் பழக்கம் இருந்தது. 'விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நன்னிலை பொறித்த கல்' (அகம் 179)
'என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்' (குறள் 771)


இவ்விடங்களில் நடுகல் கல் என வழங்கப்பட்டுளமையைக் காணுகிறோம். (கல் நடுவித்தார் மதியுளி - தருமபுரி நடுகல் கல்வெட்டு). ஒரு காலத்தில் நடுகல்லை மட்டுமே தெய்வமாக வணங்கியுள்ளனர். 'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பில் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே' (புறம் 335)

என்பது மாங்குடிகிழார் பாடலாகும்.

இறந்த வீரனின் பெயரையும் பெருமையையும் கல்லில் பொறிப்பர் நடுகல்லுக்கு நீராட்டி நெய்பெய்து வாசனைப்புகை காட்டுவர். விளக்கேற்றுவர். பூக்களைச் சொரிவர். மாலை சூட்டுவர். மயிற்பீலி சாத்துவர். காப்புநூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவர். துடி, மணி ஒலிப்பர். எண்ணெய் பூசுவர். சிறு கலங்களில் கள் படைப்பர். துணிப்பந்தல் அமைப்பர். வில், வேல், வாளால் வேலி அமைப்பர். பெரும்பாலும் வழிகளில் நடுகல்லை நட்டனர். ஆழமாக நட்டனர். நடுகல்லை ஆள் என ஒரு யானை உதைத்தது. நடுகல் சாயவில்லை, யானையின் கால் நகம் உடைந்ததாம். போர்க்களத்தில் விழுப்புண் பட்டோர் நடுகல் அருகே வந்து புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால் மழைவரும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும், கால்நடை பெருகும், வீட்டுக்கு விருந்தினர் வருவர் என நம்பினர்.

தற்காலத்திலும் பொது மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு இறப்போருக்காக நடுகற்களைப் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படுவது உண்டு. இவை கற்களினால் அல்லது காங்கிறீட்டினால் கட்டப்படுகின்றன. எனினும் இவற்றைத் தற்போது நடுகற்கள் என்று குறிப்பிடுவது இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கியதாக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். விடுதலைப் புலிகளின் நிலப் பகுதிகளைக் கட்டுப் பாட்டுக் கொண்டிருந்த காலத்தில் இவை சிறப்பாக பேணப்பட்டன. 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்துதொழிக்கப்பட்டுள்ளன. போர் வீரர்களைப் புதைக்கும் இயக்க மரபு தமிழர்களின் நடுக்கல் மரபில் இருந்து பெறப்பட்டதே!

Post a Comment

0 Comments